ரசித்த அந்நிய மொழி படங்கள்

பள்ளிக்கூடம் படிக்கும் போதெல்லாம் அதிகமா படம் பார்த்ததில்லை, அதுவும் தமிழ் படத்த தவிர மத்த படங்கள் ரொம்ப ரொம்ப கம்மி. அப்ப அப்ப நம்ம ஊர்ல வர்ற ஜாக்கி சான், அர்னால்ட் தான் நமக்கு தெரிஞ்ச ஆங்கில நடிகர்கள். கடந்த நாலு வருஷ அந்நிய நாட்டு வாழ்க்கைல ஆரம்பிச்சது பிற மொழி படம் பார்க்கும் வழக்கம். ஒரு சீசன்’ல பைத்தியமா தினம் ரெண்டு மூணு படம் பாக்குற அளவுக்கு ஆயிடுச்சு. பார்த்ததில் பிடித்த (ஆங்கிலம் அல்லாத) சில உலக திரைப்படங்கள். (வருஷ கடைசி ஆகிடுச்சு, எல்லா பத்திரிக்கைகளும் , வெப்சைட்களும் ஆளுக்கு ஆள் – டாப் 10 , டாப்  20 லிஸ்ட் போடுறாங்க. நம்ம பங்குக்கு நம்மளும் ஒரு லிஸ்ட்ட போட்டு வருசத்த இனிதே முடிப்போம்!)

No Man’s Land :

no_mans land

போஸ்னிய செர்பிய போரை மையமாக கொண்ட கதை. படம் முழுவதும் ஒரு பதுங்கு குழிக்குள் தான். காயம்பட்ட வீரன் கன்னி வெடியின் மேல் மாட்டி கொள்வதும் , அவனை காப்பாற்ற சக வீரனின் போராட்டமும் தான் கதை. ” அட இப்படி கூட படம் எடுக்கலாம் போல! ” அப்படின்னு பிரம்மிக்க வச்ச படம் , 2001-ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படம்.

Life is Beautiful :

lifeisbeautiful

இத்தாலிய மொழி திரைப்படம். சில வசனங்கள் ஆங்கிலத்திலும் , ஜெர்மானிய மொழியிலும். முதல் பாகம் முழுக்க முழுக்க சக்க காமெடி , இரண்டாம் பாகம் கம்ப்ளீட் tragedy. யூதர்கள் , நாஜிஸ படைகளால் அனுபவித்த கொடுமைகள் , அதில் மாட்டி கொண்ட ஒரு குடும்பத்தின் கதை.
( நம்ம இளைய தளபதி கூட ஒரு வெளங்காத படத்துல, அசிங்கமே படாம அப்பட்டமா காப்பி அடிச்சிருப்பார் )

Talk to Her:

Talk_to_Her

ஸ்பானிய மொழி படம். அசைவே இல்லாத கோமா நிலைமையில் உள்ள ஒரு பெண்ணை பார்துக்கொள்ளும் ஒரு செவிலியன். திடிரென்று அவள் கர்ப்பமாக அந்த பழி அவன் மேல் விழுகிறது. பாலு மகேந்திரா படம் போல் மெதுவாக செல்லும் திரைக்கதை. ஆனாலும், பிற படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது.

Edge of Heaven :

edge_of_heaven

துருக்கிய , ஜெர்மானிய மொழியில் வசனங்களை கொண்ட படம். மிக அருமையான திரைக்கதை. மூன்று வெவ்வேறு கதைகளில் வரும் ஒரு காட்சியினை கொண்டு,ஒன்றுக்கொன்றுடன் கோர்வையாக காட்டியிருந்தது மிகச்சிறப்பு. படத்தின் பிண்ணனியில் வரும் ‘Kazım koyuncu’வின் ‘Ben seni sevdiğimi’ பாடல் உருக்கிவிடும்.

Rashomon :

Rashomon

கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் வாங்கிய போது வந்த படம் . புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசோவா அவர்களின் படைப்பு. ‘அட! அந்த காலத்திலேயே எப்படி யோசிச்சிருக்கார் பாருய்யா!!’ என்று சபாஷ் போட வைக்கும் படம். ஒரே சம்பவத்தை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் கதை.
(உலக நாயகன் அப்படியே நம்ம ஊருக்கு உல்டா பண்ணி விருமாண்டியா ஆக்கிடாரு.)

Paradise Now :

ParadiseNow

பொறுப்பில்லாமல் திரியும் இரு பாலஸ்தினிய இளைஞர்களை, மதத்தின் பெயரால் வசிய பேசி இஸ்ரேல் எல்லைக்குள் மனித வெடிகுண்டாக அனுப்ப முயலும் கதை. எல்லையை கடக்கும் போது இஸ்ரேலிய படைகள் அவர்களை நோக்கி சுட, ஒருவன் மட்டும் எப்படியோ உள்ளே நுழைந்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் தவிக்க, அவனது மரண பீதியையும், மன ஓட்டத்தையும் காட்டி இருக்கும் விதம் அருமை.

Amores Perros :

amores_perros

21 grams, Babel போன்ற ஆங்கில படங்களை இயக்கிய மெக்சிகோவின் புகழ் பெற்ற இயக்குனர் அலிஜாந்ரோ கொன்ஜலாசின் முதல் படம். இவரின் அனைத்து படமும் வெவ்வேறு கதைகளை(முக்கோண , நான்கு கோண கதை ) ஒன்றோடு ஒன்று இணைக்கும், இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. வன்முறை சற்று தூக்கலாகவே இருக்கும்.
(நம்ம மணி சார் கூட ஆயுத எழுத்துல லைட்டா இந்த கதைய தொட்டிருப்பார்.)

Seven Samurai :

Samurai

அகிரோ குரோசோவாவின் மற்றொரு அற்புத படைப்பு. கொள்ளையர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற ஒரு கிராமத்தினரால் ஏழு பேர் மட்டுமே கொண்ட சாமுராய்கள் உருவாக்கும் படை. படையை உருவாக்க அவர்கள் படும் பாடு, அவர்களது உணர்வுகளை அருமையாக படம் பிடித்திருப்பார். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சற்றே நீளமான படம்.

The Sea Inside :

sea_inside_ver2

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. Euthanasia என்று மேலை நாடுகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் கருணைக் கொலையை மையமாக கொண்ட கதை. தலையில் அடிபட்டு பல ஆண்டுகளாக படுக்கையில் மட்டுமே வாழ்க்கையைக்களிக்கும் ஒருவர் கருணை மரணத்திற்கு நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்ப்பிற்காக நாட்களை கடத்தும் படம். நோயாளி அண்ணனை பார்த்துக் கொள்ளும் தம்பி குடும்பத்தினரின் பாசம், அவரை பார்க்க வரும் ஒரு விதவை பெண்ணிடம் அவருக்குள் ஏற்படும் ஒரு இனம் புரியாத பாசத்தையும் அருமையாக காட்டி இருப்பார்கள்.

Maria full of grace :

maria_full_of_grace

ஸ்பானிய மொழி திரைப்படம். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தும் கதை. காதலியை கர்ப்பணியாக்கி , அவளது ஏழ்மையை பயன்படுத்தி போதை கும்பலுக்கு அறிமுகம் செய்து கமிஷன் பெற்று ஒதுங்கி கொள்ளும் ஒருவன். கர்ப்பிணியான பெண்ணை போதை மருந்து பொட்டலத்தை முழுங்க செய்து , அமெரிக்காவிற்குள் அனுப்பி, வயிற்றில் இருக்கும் போதை பொட்டலத்தை வாந்தி எடுக்க வைத்து, போதை மருந்தை விற்பது போன்ற கதை.

Nowhere in Africa :

ஜெர்மானிய மொழி திரைப்படம். நாஜிச படைகளின் கொடுமையில் இருந்து தப்பிக்க கென்ய நாட்டுக்குள் அகதியாக தஞ்சம் புகும் ஒரு யூத குடும்பம்.அங்கு அவர்கள் படும் அவதிகளும். அவர்களது  பெண் அங்குள்ள கறுப்பர் இனத்திடம் அன்பாகி உருகுவதும். அவர்களுக்கு சமையல் வேலை பார்க்கும் ஒரு கறுப்பரின் பாசமும் , கணவன் மனைவிக்குள் நிகழும் சண்டையும், விரிசல்களும் சற்றே வித்தியாசமான கதை நகர்த்தலாக இருக்கும்.schindler’s list, pianist போன்ற பார்த்துவிட்ட யூத கொடூரங்களை காட்டும் மற்றொரு படமாக இருந்து விடுமோ என்று பயந்தேன் ஆனால் சற்று வித்தியாசமாக தான் இருந்தது.

Advertisements

Comments (5)

உவ்வே.. ஆயி!!

ஏழம்பது பஸ்ஸ பிடிச்சா தான் ,எட்டே கால் ட்ரெயின எப்படியாவது பிடிக்க முடியும். இல்லேன்னா ஒன்பது மணிக்கு மீட்டிங் ஆரம்பிச்சுடுமே. இந்த மேனேஜர் முன்னாடி போய் அசடு வழிய நிக்கனுமே! நேரம் ஆகி போச்சு .. இன்னைக்கு மிஸ் பண்ண தான் போறேன்.. அவசர அவசரமா ஓடி, லிப்ட்டுக்கு காத்திருக்க பொறுமையில்லாம ஆறு மாடி எறங்கி மூச்சிரைக்க கீழ போனா இன்னும் பஸ் வரல.

பஸ் ஸ்டாப்பில், என்னை போன்றே நிறைய அவதி முகங்கள். கூட்டத்தில் நனைந்த தலையை விரித்து விரலால் துவட்டியபடி, பார்க்க கூடாத ஏதோவொன்றை பார்த்துவிட்ட முக பாவனையுடன் ஒரு வெள்ளைக்கார பெண்மணி. அவசரமாய் செல்போனை எடுத்து யாரிடமோ பேச எண்ணை அழுத்தினார்.

ஹலோ! மெயிண்டனன்ஸ் டிப்பார்ட்மண்டா ? நான் பில்டிங் 220’ல அபார்ட்மன்ட் 205’ல இருக்கேன். காலைல எறங்கி வரும்போது…
என்று சொல்ல முடியாமல் இழுத்தார்.

அத எப்படி சொல்றதுன்னு தெரியல .. இதுக்கு முன்னாடி ஒரு தடவை இது மாதிரியே நடந்திருக்கு , இது ரெண்டாவது தடவை .. “

அடிக்கடி இப்படி நடந்தா நல்லா இல்லைன்னு தான் கால் பண்ணேன் .அது வந்து ..அது வந்து ” என்று தயங்கி சொல்லமால் இழுத்துக்கொண்டே போக, பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த மொத்த கூட்டமும் அந்த பெண் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கேட்க ஆவலோடு காதை தீட்டிக் காத்துக்கொண்டிருந்தது .

you know, someone’s dog ….hmmm
you know, someone’s dog has left droppings in the veranda of our building “
” உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சிருக்கும் , தயவு செஞ்சு ஆளுங்கள விட்டு க்ளீன் பண்ண சொல்றிங்களா?

என்று சொல்லி , அப்பாடா ஒரு பெரிய காரியம் முடிஞ்சது என்பது போல் செல்போனை அணைத்தார். மொத்த கூட்டமும், அவர் தான் அப்படி செய்துவிட்டார் என்பது போல் பார்ப்பதை உணர்ந்தவர் சற்று சங்கடத்தில் நெளிந்து தான் போனார்.

ஒரு தர்ம சங்கடமான விஷயத்தை,அதுவும் ஒரு பொதுவிடத்தில், இதை உரியவரிடம் சொல்வது தனது கடமை என்பது போல், நாசுக்காக கூறியதை பார்த்த போது அந்த பெண் எனக்கு சற்று உயர்வாகவே தோன்றினார். இதே நம்மளா இருந்தா , ‘ யோவ் என்னைய்யா வீட்ட கட்டி வச்சுருக்கிங்க , இங்க எவன் நாயோ பே… போட்டு வச்சிருக்கு. வந்து கழுவி விடாம , என்னையா பண்றிங்க ‘ அப்படின்னு சொல்லிருப்போமோ அப்படினு நெனச்சுக்கிட்டே பயணத்த தொடர்ந்த போது, மிஸ்டர் மங்குனி ஜோக் ஒன்னு ஞாபகத்துல வந்தது.

மிஸ்டர் மங்குனி இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக் கொண்டிருந்தார். அவரது விமானம் மும்பையில் தரையிறங்க போகிறது , அடுத்த அரை மணி நேரத்தில் அவர் சென்னைக்கு விமானத்தை பிடிக்க வேண்டும். அவருக்கோ வயிறு கலக்க , வேகமாக டாய்லட் நோக்கி சீறிப் பாய்கிறார். அவரை தடுத்த விமானப் பணிப்பெண்

மிஸ்டர் , பிளைய்ட் எறங்க போகுது இப்ப டாய்லட் போக முடியாது

மேடம் வயிறு கடமுட’ங்குது , ஒரு நிமிஷம் குடுத்திங்கனா ஸ்மூத்தா முடிச்சிட்டு வந்துறேன் ‘

நோ , நோ , இந்த ஏழு மணி நேர பயணத்துல அஞ்சு மணி நேரம் நீங்க உள்ள தான் இருந்திருக்கிங்க , பிளைய்ட் இறங்கும் போது யாரும் உள்ள போக கூடாது ‘

அதுக்காக வெளியவா போக முடியும் , ப்ளீஸ் என்ன அலோவ் பண்ணுங்க ‘

நோ நோ , நீங்க ரொம்ப மொரண்டு பிடிச்சா நான் கேப்டன்ட சொல்ல வேண்டியிருக்கும் ‘

வேண்டாம் மேடம் அவருக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்புனு டயலாக் எல்லாம் சொல்லுவாரு , அதுக்கு ஒரு மூணு கல்’ல பாக்கெட்ல போட்டு மூணு தடவை நின்னுக்கோ நின்னுக்கோ அப்படின்னு சொன்ன நின்னுடும்னு என் பாட்டி சொல்லிருக்காங்க, ஒரு மூணு கல்லாவது குடுக்க முடியுமா? ‘

நோ , போய் உக்காருங்க’.

அதே நேரம் விமானம் தடதடவென தரையிறங்க அந்த அதிர்ச்சியில் அவருக்கு அடி வயிற்றில் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

வேகமாக விமானத்திலிருந்து இறங்கி , அருகிலிருந்த டாய்லட்டுக்குள் நுழைந்து பேண்டை கழற்றி தலைக்கு மேல் தரதரவென சுற்ற , பேண்டில் ஒட்டி இருந்த சமாச்சாரம் சுவரில் ஒரு வட்டம் அடித்து விட்டது.

யாராவது பார்த்தால் அசிங்கமாகிவிடும் என்று , வெளியில் இருந்த சுத்தம் செய்யும் சிறுவனிடம் ஒரு பத்து ருபாய் கொடுத்து

தம்பி சுவத்துல கொஞ்சம் அழுக்கு ஒட்டிருக்கு சுத்தம் பண்ணிடு

உள்ளே சென்ற சிறுவன் போன வேகத்தில் மூக்கை பிடித்து கொண்டு வெளியே ஓடி வந்து ,

சார் எப்டி சார் சுவத்துல ஏறி இப்படி ஒரு வட்டம் போட்டிங்க ? ப்ளீஸ் எனக்கும் கத்துக்குடுங்க. ! ‘ என்று இருபது ரூபாயை அவரிடம் நீட்டினான்.

Comments (2)

வேசதாரி

இன்னைக்கு எப்படியாவது உட்கார்ந்து இந்த விசயத்தை எழுதிடணும்னு பல நாட்கள் பல விசயங்கள , நடுராத்திரி கூட யோசிச்சுருக்கேன் , என்ன எழுதனும்னு கூட தீர்மானம் பண்ணிடுவேன் . ஆனா மறுநாள் எதாவது ஒன்னு வந்து அது தடைப்பட்டு போகும் , அத அப்படியே மறந்துடுவேன். போன வாரம் என் நண்பன் ஒருத்தன்ட பேசிட்டு இருக்கும்போது அவன் ” ஏன்டா ப்ளாக் எல்லாம் ஆரம்பிச்சு , ஆர்வக் கோளாறுல கொஞ்ச நாளா எழுதிட்டு இருந்தியே , இப்ப என்னாச்சு ? ” அப்படின்னு கேட்டான். அப்ப முடிவு பண்ணுனேன் , இன்னைக்கு அட்லீஸ்ட் நம்ம ப்ளாக்’ல புகுபதிகையாவது ( login) பண்ணிடனும்னு. வந்தது தான் வந்துட்டேன், அப்படியே வழக்கம் போல எல்லாருக்கும் வணக்கத்த சொல்லிட்டு , பித்தனின் புலம்பல்கள ஆரம்பிக்கிறேன்.

இந்த ஒரு வாரமாக ஆங்கில ஊடகங்களுக்கும் , தமிழில் தினமலர் போன்ற தரம் வாய்ந்த நாளிதழ்களும் இந்தியாவின் மாவீரனும், மக்களுக்காக தன் இன்னுயிரையும் ஈயத் தயாராக இருக்கும் பகதுர்ஷா (பாதுஷா) ஷாருக்கானை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கேள்வி கேட்டதை, பாரதத்தின் புகழுக்கு பங்கம் விளைவித்ததாகவே சித்தரித்து கொண்டிருக்கின்றன. அவரும் , தான் இந்த உலகையே ஆள்பவர் போல் , தன்னிடம் கேள்வி கேட்டது தவறு என்றும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.

இவன் யார் ? இந்த வேசதாரியை கேள்வி கேட்டதை குறை என்று சொல்லி , அதன் மூலம் ஆதாயம் தேட அலைந்து கொண்டிருக்கும் நமது வெட்கம் கெட்ட பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும், உள்துறை அமைச்சரும் , அவரது சகாக்களும் தான் கபடதாரிகள். அமெரிக்க அதிகாரிகள், ஷாருக்கான் என்ற தனிப்பட்ட நபரின் மேல் எங்களுக்கு சந்தேகம் கிடையாது , ஆனால் , அவரை வைத்து நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததால் தான் அவரிடம் விசாரணை செய்தோம் என்று கூறியிருக்கின்றனர். அமெரிக்க அதிகாரிகளின் செயல் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ‘ ஐயா ஷாருக்கான் வந்துருக்காக, அவருக்கு மாலை மருவாதி பண்ணி பந்தோபஸ்த்தோட மேடைல கொண்டுபோய் விட்டுட்டு வாங்கடா!!’ அப்படின்னு சொல்றதுக்கு இது இந்தியாவும் இல்லை , அப்படி கட்டளையிடுவதற்கு இங்கு சிதம்பரம் உள்துறை அமைச்சரும் இல்லை. ஒரு பாகிஸ்தானியனும், அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்புடைய கட்சிக்கு வாரி வழங்கி கொண்டிருக்கும் ஒரு வள்ளலுக்கு நிகழ்ச்சி நடத்தவே அமெரிக்கா வந்ததாக கூறியதால் தான் இவனை ஒரு மணி நேரம் உட்கார வைத்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

” நான் மும்பையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவே அமெரிக்கா வந்தேன் , அதை விரும்பாத அமெரிக்கா என்னை அனுமதிக்கவில்லை. ஆகவே இந்தியர்கள் அமெரிக்காவை புறகணிக்க வேண்டும் “என்று அடுத்த பேட்டி கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை . (அந்த பேட்டி முடிந்து அடுத்த விமானத்தில் மீண்டும் அமெரிக்கா வருவார் ). இவர் தன்னை தொலை நோக்கு பார்வை கொண்டவராகவும் , தான் அரசியலுக்கு வரப் போவதாகவும் வேறு கூறிகொண்டிருப்பது வயிற்றில் புளியை கரைக்கிறது.

இது இந்தியாவிற்கு தலைகுனிவா? ” ஆம், தீவிரவாத தொடர்புடைய ஒருவனுக்கு இவ்வளவு வருடமாக நிகழ்ச்சி நடத்தி , கோடிக்கணக்கில் பணம் சேர்த்துக் கொடுத்து தன்னை உத்தமனாக காட்டிகொண்டிருக்கும் இந்த கபடதாரியை தூக்கி வைத்து கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவிற்கு தலைக்குனிவு “.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

அரசியல் காமெடிகள்

அரசியல் என்றாலே காமெடி தான்! அதுவும் தேர்தல் வந்துவிட்டால் மெகா காமெடி தான்! இதோ இங்கே சில கற்பனை மற்றும் எப்போதோ படித்த காமெடிகள்.

சிவகாசி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ‘வெண்கல குரலோன்’ வைகோ அவர்கள், ” அமெரிக்காவிலே, நான் சென்று வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலே(!!) நடைபெற்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை உரைக்க செய்து, ஜெய் ஹோ என்று பாடி பாராட்டு பெற்று , ஒன்றுக்கு இரண்டு விருது பெற்ற தங்க தமிழன் ரஹ்மானை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் பாடிய அந்த பாடலை களவாணி காங்கிரஸ் கட்சி அபகரித்து தேர்தலுக்கு பயன்படுத்துகிறது ( தோளை உலுக்கிக் கொண்டு ), அது ‘ஜெய் ஹோ ‘ அல்ல ‘ ஜெய கோ ‘ . தமிழகத்தின் இதய தெய்வம் அன்னை அவர்களின் முதல் எழுத்தையும் எனது பெயரின் கடைசி எழுத்தையும் சேர்த்து தான் தம்பி ரஹ்மான் இசை அமைத்தார். ஆகவே அந்த பாடலை எங்கள் வெற்றிக் கூட்டணிக்கே உரியது” என்று “ஜெய கோ ” என்று ரஹ்மான் போல் உடலை வளைத்து அவர் பாட ஆரம்பிக்க , கூட்டம் தலை தெறிக்க பறக்கிறது!

சுப்ரமணிய சுவாமியிடம் நிருபர்கள் ‘இந்த தேர்தல்ல எந்த கட்சி ஆட்சிய பிடிக்கும்னு நினைக்கிறிங்க?’ , ‘எவாளும் பிடிக்க மாட்டா!! (அதையே ஆங்கிலத்தில்) nobody is going to win !! கடைசியா எலக்சன் முஞ்சு என்ட வந்து நிப்பா! ‘
நிருபர்கள் திகைப்புடன் ,’ நீங்க தான் தேர்தல்ல போட்டியிடலையே ?’ ,
‘ அதுனால என்ன இப்போ, என்கு இப்வே 225 எம்.பிஸ் சபோர்ட் இருக்கு , அதோட சீனா ஆதரவுல கம்யூனிஸ்ட் சப்போர்ட் வாங்கி ஆட்சிய புச்சுடுவேன், அடுத்த PM நான் தான்!! ‘ – நிருபர்கள் அனைவரும் எஸ்கேப்!

படித்தவை :

1. விஜய்காந்த் ஒரு கூட்டத்தில், குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ‘பிரேமா’என்று தன் மனைவியின் பெயரை வைத்துள்ளார். ‘தலைவா, அது ஆண் குழந்தை என்று குழந்தையின் அப்பா கூவிச் சொன்னவுடன், ’சரி, சரி அப்படியானால் ‘பிரேமானந்தா’ என்று பெயர் சூட்டுகிறேன்”என்று கூறியுள்ளார்.

பிள்ளையின் பெற்றோர்கள் திகைத்துப் போய்விட்டனர். ‘இப்படி ஒரு பெயரா, வேண்டாம் வேறு பெயர் சூட்டுங்கள”; என்று கேட்க, ‘பிறகெதற்கு என்னிடம் வந்தீர்கள்? நீங்களே பெயர் வைத்துக் கொள்வதுதானே’என்று கோபமாகப் பேசியுள்ளார்.

2. காலத்தின் கோலம்?

”சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர்களைக் கண்டு மிரண்டுதான் போனேன். ஜனவரி 30- அன்றுதான் அழகிரி பிறந்திருக்கிறார்; காந்தி இறந்திருக்கிறார்!”

Comments (6)

மாற்றங்கள்

தீவிரவாதம் , பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு என்று சோதனையும் வேதனையும் நிறைந்த 2008 நிறைவடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. 2009’ல் பெரும் மாற்றத்தை எதிர் நோக்கி உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. மூன்றே வாரத்தில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன,அவற்றுள் சில:

வருடத்தின் முதல் வாரமே இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு ஒரு தலை குனிவாக அமைந்தது. தங்கள் நிலுவை கணக்கில் காட்டப்பட்ட 7000 கோடி ரூபாய் பொய்யானது என்றும் , இதற்கு தார்மீக பொறுபேற்று பதவி விலகுவதாக அறிவித்தார் சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு. இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனம்; 53,000 ஊழியர்கள் கொண்ட நிறுவனம்; உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம் , இமாலய மோசடி செய்திருப்பது கண்டிப்பாக இந்தியாவிற்கு உலகளவில் ஒரு பெரிய தலைகுனிவே! எவ்வளவோ தில்லு முள்ளு செய்தாலும் அதை மூடி மறைக்க பார்க்கும் நம்மவர்கள் மத்தியில் , தான் மட்டும் தான் இதற்கு பொறுப்பு என்று பதவி விலகியது இன்றைக்கும் ஒரு புரியாத புதிர் ! பல கோடி ரூபாய் மோசடியை கண்டிப்பாக ஒருத்தரால் செய்திருக்க முடியாது, அதுவும் ‘price water coopers’ போன்ற நிறுவனங்களின் ஆய்விற்கு பிறகும்!! தின்று பெருத்த பெருச்சாளிகள் இருட்டில் ஒழிந்திருக்கின்றனவோ?

அடுத்த மாற்றம், இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் விருது வாங்கிய அதே மேடையில், தனக்கே உரித்தான அடக்கத்துடன் ரஹ்மான் ‘ Golden Globe’ விருது வாங்கியதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் துக்கடா வேடங்களில் நடித்தவர்களும், நண்டு சுண்டுகளும் எதோ தாங்களே விருது வாங்கியது போல் ஆட்டம் போட்டு கொண்டிருந்த போது, தமிழனுக்கே உரிய சபை அடக்கத்துடன் , இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களுக்கும் நன்றி கூறியது மிக மிக சிறப்பு. ஒட்டு மொத்த இந்தியாவையும் இசையால் அசத்திய கலைஞனுக்கு உலக அங்கிகாரம் கிடைத்திருப்பது ஒரு சிறப்பான விஷயம். அடுத்த மாதம் அறிவிக்கப்படும் ஆஸ்கார் விருதில் மூன்று விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இவர் , நிச்சயம் ஒரு விருதையாவது பெற்று இந்தியாவிற்கும் , தமிழனுக்கும் பெருமை சேர்ப்பார் !

அடுத்த மாற்றம், அமெரிக்காவின் 160 ஆண்டு கால வரலாற்றில் , முதல் முறையாக கருப்பினத்தை சார்ந்த ஒபாமா அதிபராக பதவி ஏற்றிருப்பது. மழலையிலே தந்தையை பிரிந்து , ஒரு மிக சாதாரணமான நிலையிலிருந்து அதிபராகி இருப்பது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.பொருளாதார தத்தளிப்பு , அதிகளவில் வேலையிழப்பு , வறுமை ,ஈராக் போரினால் உலகளவில் அவப்பெயர் என்ற நிலையில் அதிபராக பொறுப்பேற்று இருக்கிறார். தனது தேர்தல் சொல்லான ‘மாற்றத்தை கொண்டு வருவோம் ‘ என்பது போல் அதிபராகி ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார் , அடுத்து பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவாரா? என்று உலகம் ஏங்கி கொண்டிருக்கிறது. ஏற்படுத்தி, 2009’ஐ வெற்றி ஆண்டாக மாற்றுவார் என்று நம்புவோம் !

Comments (1)

Happy New Year’2009

Wishing you all a happy , successful, healthy , wealthy and peaceful new year – 2009 !!

May the Almighty shower his blessings to make all our dreams come true!
Let 2009 be a terror-free, recession-free , debt-free, war-free year with a secured job and financial stability!

2009 – Warm New Year Wishes

View SlideShare presentation or Upload your own. (tags: new year)

பின்னூட்டமொன்றை இடுங்கள்

வாரணம் ஆயிரம்!

இப்பெல்லாம் சினிமா பார்ப்பதையே குறைத்து விட்டேன். பல மாதங்கள் ஆகிவிட்டது படம் பார்த்து. ‘ சூர்யா படம் வந்துருக்கு போகலாம்ங்க’ அப்டின்னு வீட்டுக்காரம்மா ஆசைப்பட்டதால, சரி போவோம்னு கிளம்பிட்டோம்.  எப்பவும் படம் போட்டு ஒரு அஞ்சு நிமிசத்துக்கு அப்பறம் தான் போறது வழக்கம் ஆனா இந்த படம் சூர்யா படம், கெளதம் இயக்கம் அப்டின்றதால வெகு சீக்கிரமே கிளம்பிட்டோம்.
படம் நல்லா இருக்கோ இல்லையோ, தமிழ் படம் முக்கியமா போறதே இங்க இருக்க தமிழர்கள பார்க்கலாம். அதுவும் இல்லாம சில விசில் அடிச்சான் குஞ்சுகள் பட்டைய கெளப்பி நம்ம ஊரு feeling’a குடுப்பாங்க. தியேட்டர்குள்ள டிக்கெட் எடுக்கும் போதே, கட்டவுட் உயரத்துக்கு ரஜினி போஸ்டர் ஒன்னு ( மூணு மாசத்துக்கு முன்னாடி வந்த குசேலன் படத்துக்கு வச்சது), அப்படியே நம்ம ஊரு மாதிரி தான் இருந்தது.

தியேட்டர்குள்ள போனா,  பின்னாடி இருந்த அஞ்சாறு வரிசை நிரம்பிடுச்சு. நடுவுல இடம் கிடைக்காமல் போக ஓரமா ஒரு சீட்ட பிடிச்சு உக்காந்தாச்சு. இப்ப  படம் ஆரம்பிச்சுடாங்க, முதல் சீன்;  ஒரு கிழவர் நடக்க முடியாம நடந்து வர்றார். நல்லா உன்னிப்பா பாத்தா நம்ம சூர்யா!  Body language அப்படியே கிழவர் மாதிரி. கலக்கிட்டாருயா அப்படின்னு தியேட்டரே சீட் நுனிக்கு வந்துடுச்சு. அடுத்த ரெண்டு சீன்’ல பாத்தா ரெத்தம் ரெத்தமா வாந்தி எடுக்குறாரு, ஒரு படத்த பாத்து சிரிக்கிறாரு, pulse கொரஞ்சுடுச்சுன்னு டாக்டர கூப்பிடுறாங்க, அவரு வர்றதுக்கு முன்னாடி இவர் போய்டுறார். அடுத்த சீன் இன்னொரு சூர்யா! அவரு ஹெலிகாப்டர்’ல பறந்துட்டு இருக்கார், ஒரு போன் வருது அப்பா இறந்துடாருனு, அழுகுறார், அப்பறம் வழக்கம் போல flash back. இப்ப, சீட் நுனில இருந்த மொத்த தியேட்டரும் அப்படியே பின்னால சாஞ்சது தான், படம் முடியிற வரைக்கும் முன்னாடி வரவே இல்ல.

கெளதம் மேனன் கதைக்கு ரொம்ப மெனக்கிடவே இல்ல போல. சூர்யா’வ போட்டு புழிஞ்சு எடுத்திருக்கார். சூர்யா ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார். school student’ல இருந்து கிழவன் character வரைக்கும் கனகச்சிதமா பொருந்துது. கௌதமும் , அப்பா சூர்யா’வ எழுபதுகள்ள வர்ற ரவிச்சந்திரன், முத்துராமன் மாதிரியும் அம்மா சிம்ரன்’ன சரோஜா தேவி மாதிரி எல்லாம் காட்டிருக்கார். ஆனா, என்னமோ ஆட்டோகிராப் மாதிரியோ, சுப்ரமணியபுரம் அளவுக்கு ஒரு நேர்த்தியோ இல்லை. நிறைய இடங்கள்ள செட் அப்பட்டமா தெரியுது.

கதைனு பாத்தா புதுசா ஒன்னும் இல்லை, ஏற்கனவே சேரன் சொல்லிட்ட அப்பா மகன் பாசம் + ‘சில்லென்று ஒரு காதல்’ கலந்த ஒரு மிக்ஸ் மாதிரி இருக்கு. சூர்யா school’ல படிக்கிறார், அடுத்த சீன் காலேஜ் போறாரு, guitar வாசிக்கிறார்.  காலேஜ் முடிச்சு ரயில்’ல ஒரு பொண்ண சந்திக்கிறார், காதல் வந்துடுது.  அடுத்து தனியா கம்பெனி ஆரம்பிக்கிறார், அப்பா வாங்குன கடனை அடைக்கிறார், வீட்டை கட்டுறார்.
காதலிச்ச பொண்ணு அமெரிக்கா போனவுடனே இவரும் arrear வச்சிருந்தாலும் visa counselling போறாரு, இவருக்கும் visa  குடுத்திடுறாங்க, அமெரிக்கா வந்திடுறார், காதல் பிறக்குது, அந்த அம்மா ஒரு வெடி விபத்துல இறந்து போக, இவரு வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு மாறிடுறார். அப்பறம் காஷ்மீர் போறார், டெல்லி போறார்,  வீர பதக்கம் வாங்குறார், கடைசில ராணுவத்துல மேஜர் ஆயிடுறார். (தரணிய விட ரொம்ப வேகமான திரைக்கதை அமைச்சிருக்கார் கெளதம்!) இப்ப மறுபடியும் ஹெலிகாப்டர். அப்பறம் என்ன? சுபம்!

கடைசியா அப்பா அஸ்திய கரைக்கும் போது அழக் கூடாது, அப்பாக்கு பிடிக்காது ‘ வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து ‘ அப்டின்னு சிம்ரன் எதோ டயலாக் சொல்ல எல்லாரும் சிரிக்க படம் முடிஞ்சிடுது. படம் போறதுக்கு முன்னாடி மெட்ராஸ் தமிழ் மட்டுமே தெரிஞ்ச நண்பர் ‘ 1000 colors’ பார்த்துட்டியானு கேட்டப்ப எனக்கு ஒன்னும் புரியல, அப்பறம் இத தான் கேக்குறான்னு யூகிச்சேன். அப்பறம் அவனுக்கு வர்ணத்துக்கும் வாரணத்துக்கும் வித்தியாசம் சொல்ல வேண்டி போச்சு. கடைசி வரைக்கும் பட தலைப்பு ஏன்னு புரியவே இல்ல!!?

தியேட்டர்ல விசில் பறந்த சீன் திருவண்ணாமலை பட trailer’ku தான் , கதை , திரைக்கதை, பாடல்கள் , வசனம் அப்படின்னு பேரரசு பேரை போட , அவரு பாத்தா  ரஜினி மாதிரி சொடக்கு போட்டு வந்த நிக்கிறாரு. சிவாஜிக்கு அப்பறம் அந்தளவுக்கு ஒரு விசில் சத்தம் இந்த trailer’ku தான். அக்ஷன் கிங் அர்ஜுன் கலக்க போறாரு, இந்த படத்த தான் நான் அடுத்து ரொம்ப ஆவலா எதிர்பாத்துட்டு இருக்கேன்!

Comments (1)

Older Posts »