Archive for திசெம்பர், 2009

ரசித்த அந்நிய மொழி படங்கள்

பள்ளிக்கூடம் படிக்கும் போதெல்லாம் அதிகமா படம் பார்த்ததில்லை, அதுவும் தமிழ் படத்த தவிர மத்த படங்கள் ரொம்ப ரொம்ப கம்மி. அப்ப அப்ப நம்ம ஊர்ல வர்ற ஜாக்கி சான், அர்னால்ட் தான் நமக்கு தெரிஞ்ச ஆங்கில நடிகர்கள். கடந்த நாலு வருஷ அந்நிய நாட்டு வாழ்க்கைல ஆரம்பிச்சது பிற மொழி படம் பார்க்கும் வழக்கம். ஒரு சீசன்’ல பைத்தியமா தினம் ரெண்டு மூணு படம் பாக்குற அளவுக்கு ஆயிடுச்சு. பார்த்ததில் பிடித்த (ஆங்கிலம் அல்லாத) சில உலக திரைப்படங்கள். (வருஷ கடைசி ஆகிடுச்சு, எல்லா பத்திரிக்கைகளும் , வெப்சைட்களும் ஆளுக்கு ஆள் – டாப் 10 , டாப்  20 லிஸ்ட் போடுறாங்க. நம்ம பங்குக்கு நம்மளும் ஒரு லிஸ்ட்ட போட்டு வருசத்த இனிதே முடிப்போம்!)

No Man’s Land :

no_mans land

போஸ்னிய செர்பிய போரை மையமாக கொண்ட கதை. படம் முழுவதும் ஒரு பதுங்கு குழிக்குள் தான். காயம்பட்ட வீரன் கன்னி வெடியின் மேல் மாட்டி கொள்வதும் , அவனை காப்பாற்ற சக வீரனின் போராட்டமும் தான் கதை. ” அட இப்படி கூட படம் எடுக்கலாம் போல! ” அப்படின்னு பிரம்மிக்க வச்ச படம் , 2001-ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படம்.

Life is Beautiful :

lifeisbeautiful

இத்தாலிய மொழி திரைப்படம். சில வசனங்கள் ஆங்கிலத்திலும் , ஜெர்மானிய மொழியிலும். முதல் பாகம் முழுக்க முழுக்க சக்க காமெடி , இரண்டாம் பாகம் கம்ப்ளீட் tragedy. யூதர்கள் , நாஜிஸ படைகளால் அனுபவித்த கொடுமைகள் , அதில் மாட்டி கொண்ட ஒரு குடும்பத்தின் கதை.
( நம்ம இளைய தளபதி கூட ஒரு வெளங்காத படத்துல, அசிங்கமே படாம அப்பட்டமா காப்பி அடிச்சிருப்பார் )

Talk to Her:

Talk_to_Her

ஸ்பானிய மொழி படம். அசைவே இல்லாத கோமா நிலைமையில் உள்ள ஒரு பெண்ணை பார்துக்கொள்ளும் ஒரு செவிலியன். திடிரென்று அவள் கர்ப்பமாக அந்த பழி அவன் மேல் விழுகிறது. பாலு மகேந்திரா படம் போல் மெதுவாக செல்லும் திரைக்கதை. ஆனாலும், பிற படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது.

Edge of Heaven :

edge_of_heaven

துருக்கிய , ஜெர்மானிய மொழியில் வசனங்களை கொண்ட படம். மிக அருமையான திரைக்கதை. மூன்று வெவ்வேறு கதைகளில் வரும் ஒரு காட்சியினை கொண்டு,ஒன்றுக்கொன்றுடன் கோர்வையாக காட்டியிருந்தது மிகச்சிறப்பு. படத்தின் பிண்ணனியில் வரும் ‘Kazım koyuncu’வின் ‘Ben seni sevdiğimi’ பாடல் உருக்கிவிடும்.

Rashomon :

Rashomon

கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் வாங்கிய போது வந்த படம் . புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசோவா அவர்களின் படைப்பு. ‘அட! அந்த காலத்திலேயே எப்படி யோசிச்சிருக்கார் பாருய்யா!!’ என்று சபாஷ் போட வைக்கும் படம். ஒரே சம்பவத்தை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் கதை.
(உலக நாயகன் அப்படியே நம்ம ஊருக்கு உல்டா பண்ணி விருமாண்டியா ஆக்கிடாரு.)

Paradise Now :

ParadiseNow

பொறுப்பில்லாமல் திரியும் இரு பாலஸ்தினிய இளைஞர்களை, மதத்தின் பெயரால் வசிய பேசி இஸ்ரேல் எல்லைக்குள் மனித வெடிகுண்டாக அனுப்ப முயலும் கதை. எல்லையை கடக்கும் போது இஸ்ரேலிய படைகள் அவர்களை நோக்கி சுட, ஒருவன் மட்டும் எப்படியோ உள்ளே நுழைந்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் தவிக்க, அவனது மரண பீதியையும், மன ஓட்டத்தையும் காட்டி இருக்கும் விதம் அருமை.

Amores Perros :

amores_perros

21 grams, Babel போன்ற ஆங்கில படங்களை இயக்கிய மெக்சிகோவின் புகழ் பெற்ற இயக்குனர் அலிஜாந்ரோ கொன்ஜலாசின் முதல் படம். இவரின் அனைத்து படமும் வெவ்வேறு கதைகளை(முக்கோண , நான்கு கோண கதை ) ஒன்றோடு ஒன்று இணைக்கும், இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. வன்முறை சற்று தூக்கலாகவே இருக்கும்.
(நம்ம மணி சார் கூட ஆயுத எழுத்துல லைட்டா இந்த கதைய தொட்டிருப்பார்.)

Seven Samurai :

Samurai

அகிரோ குரோசோவாவின் மற்றொரு அற்புத படைப்பு. கொள்ளையர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற ஒரு கிராமத்தினரால் ஏழு பேர் மட்டுமே கொண்ட சாமுராய்கள் உருவாக்கும் படை. படையை உருவாக்க அவர்கள் படும் பாடு, அவர்களது உணர்வுகளை அருமையாக படம் பிடித்திருப்பார். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சற்றே நீளமான படம்.

The Sea Inside :

sea_inside_ver2

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. Euthanasia என்று மேலை நாடுகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் கருணைக் கொலையை மையமாக கொண்ட கதை. தலையில் அடிபட்டு பல ஆண்டுகளாக படுக்கையில் மட்டுமே வாழ்க்கையைக்களிக்கும் ஒருவர் கருணை மரணத்திற்கு நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்ப்பிற்காக நாட்களை கடத்தும் படம். நோயாளி அண்ணனை பார்த்துக் கொள்ளும் தம்பி குடும்பத்தினரின் பாசம், அவரை பார்க்க வரும் ஒரு விதவை பெண்ணிடம் அவருக்குள் ஏற்படும் ஒரு இனம் புரியாத பாசத்தையும் அருமையாக காட்டி இருப்பார்கள்.

Maria full of grace :

maria_full_of_grace

ஸ்பானிய மொழி திரைப்படம். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தும் கதை. காதலியை கர்ப்பணியாக்கி , அவளது ஏழ்மையை பயன்படுத்தி போதை கும்பலுக்கு அறிமுகம் செய்து கமிஷன் பெற்று ஒதுங்கி கொள்ளும் ஒருவன். கர்ப்பிணியான பெண்ணை போதை மருந்து பொட்டலத்தை முழுங்க செய்து , அமெரிக்காவிற்குள் அனுப்பி, வயிற்றில் இருக்கும் போதை பொட்டலத்தை வாந்தி எடுக்க வைத்து, போதை மருந்தை விற்பது போன்ற கதை.

Nowhere in Africa :

ஜெர்மானிய மொழி திரைப்படம். நாஜிச படைகளின் கொடுமையில் இருந்து தப்பிக்க கென்ய நாட்டுக்குள் அகதியாக தஞ்சம் புகும் ஒரு யூத குடும்பம்.அங்கு அவர்கள் படும் அவதிகளும். அவர்களது  பெண் அங்குள்ள கறுப்பர் இனத்திடம் அன்பாகி உருகுவதும். அவர்களுக்கு சமையல் வேலை பார்க்கும் ஒரு கறுப்பரின் பாசமும் , கணவன் மனைவிக்குள் நிகழும் சண்டையும், விரிசல்களும் சற்றே வித்தியாசமான கதை நகர்த்தலாக இருக்கும்.schindler’s list, pianist போன்ற பார்த்துவிட்ட யூத கொடூரங்களை காட்டும் மற்றொரு படமாக இருந்து விடுமோ என்று பயந்தேன் ஆனால் சற்று வித்தியாசமாக தான் இருந்தது.

Comments (5)