நண்பர்களின் பேராதரவுடன், ரசிக பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வயிறு குலுங்க சிரிக்க வைத்த நமது காமெடி வெடிகள் இந்த வாரமும் வானவேடிக்கை காட்டப்போகிறது. என்னடா ஓவரா கமெண்டரி குடுக்குறானேனு பாக்குறிங்களா? இந்த வாரம் நம்ம டயலாக் எல்லாமே நான் கேட்டு ரசிச்ச இந்த மாதிரி commentary dialogues!
வாங்க commentators’a meet பண்ணலாம்!!
எங்க ஊர்ல வருஷ வருஷம் கிரிக்கெட் tournament நடக்கும். பந்தல் போட்டு, முக்கோண கலர் காகித தோரணம் கட்டி, பெரிய குழாய் ஸ்பீக்கர் வச்சு படு அமர்களமா நடக்கும். எங்க ஊரு ஹர்ஷா போகலே ,கவாஸ்கர், சாஸ்திரி எல்லாம் வைரமுத்து மாதிரி செந்தமிழ்ல தான் வர்ணனை பண்ணுவாங்க. Tony Greig மாதிரி ஒரு வாக்கியத்துக்கு , அம்பது வார்த்தைக்கு அப்பறம் தான் முற்றுப்புள்ளி வப்பானுங்க.
ஒரு சில சாம்பிள்கள் , ( Tony Greig பேசுற மாதிரி வேகமா படிங்க, அப்ப தான் effect மாறாம இருக்கும் )
* வரவேற்புரை :
இன்று நடக்கும் இந்த போட்டியை துவக்கி வைக்க வருகைத் தந்திருப்பவர், நமது பதிமூனாவது வார்டை சேர்ந்த கவுன்சிலர் மற்றும் க.மு.க கட்சியின் ஒன்றிய துணைப் பொது செயலாளர், கேட்காமலேயே கொடுக்கும் கொடை வள்ளல், இப்போட்டியை சிறப்புற நடத்த 1001 ரூபாய் நன்கொடையும் வழங்கிய, அண்ணன் ‘அஞ்சாசிங்கம்’ ஆண்டிச்சாமி அவர்களை எங்கள் Blue Bird cricket club’ இன் சார்பாக வருக வருக என வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்.(சொல்லி முடிச்சிட்டு light’a மூச்சு வாங்கும்)
(எங்க ஊரு மைனர் மாப்பிள்ளைகளுக்கு எப்பவும் பேரோட ஒரு அடைமொழி ஒட்டிட்டே இருக்கும் , உதாரணத்துக்கு பாண்டியன் அப்டின்னு ஒருத்தர், கிரிக்கெட் ஆடுனா அவர் பேரு ‘ரிக்கி பாண்டி’ , கமல் படம் ரிலீஸ்னா, ரசிகர்மன்ற போஸ்டர்’ல அவர் பேரு ‘பாண்டியஹாசன்’)
மேட்ச்’ல சில commentary
* ஆட்டத்தின் முதல் பந்தை வீச இருப்பவர் காமயகவுண்டன்பட்டி சச்சின் கிரிக்கெட் கிளப்பை சார்ந்த எசக்கி, அதை எதிர்கொள்பவர் நமது மாநகரைச் சேர்ந்த மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப்பின் துவக்க ஆட்டக்காரர் ரிக்கி பாண்டி. ஆட்டத்தின் முதல் பந்து.., பந்தை வீச ஆயத்தமாகிவிட்டார்,..இதோ..இதோ.. வீசிவிட்டார்.., சற்று மேலே எழும்பி வந்த பந்தை மட்டையாளர் தடுத்து ஆட முற்பட்டார், ஆனால் பந்து மட்டையாளரை ஏமாற்றி விக்கெட் காப்பாளரிடம் தஞ்சம் புகுகிறது… (கொஞ்சம் சுதி ஏத்தி) அற்புதமான, அதிவேகமான, துல்லியமான பந்து வீச்சு.
* இரண்டாவது ஓவரை வீச வருபவர் பச்சமுத்து , அதை எதிர்கொள்பவர் கங்குலி கருப்ஸ்(உண்மையான பேரு சங்கிலிக்கருப்பு) , இவர் ஒரு இடதுகை மட்டையாளர். முதல் பந்து.. துல்லியமாக வீசப்பட்ட பந்தை அடித்து ஆட முற்பட்டார் ஆனால் பந்து கால்காப்பில் (pad) படவே அங்கு ஒரு பலத்த முறையீடு (appeal) , நடுவரால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பந்து பந்துவீச்சாளரிடம்.
* அடுத்து சுழல் பந்து வீச வருபவர் சேது வார்னே ( சேதுராமன்) , இவர் ஒரு சிக்கன பந்து வீச்சாளர்(Economical bowler). முதல் பந்து!.., ஓ…ஓ..ஓ..மிகவும் வெளியே வீசிவிட்டார். நடுவர் அதை அகலப்பந்து ( Wide ball) என்று அறிவிக்கிறார்.
* அடுத்ததாக களமிறங்குபவர் கண்ணப்பன் , இவரை நமது மாவட்டத்தின் சச்சின் டெண்டுல்கர் என்றால் அது மிகையாகாது. இவர் தனது அணிக்காக என்ன செய்ய காத்திருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம், … முதல் பந்து…, off stump’க்கு சற்று வெளியே வீசப்பட்ட பந்தை, gully திசை நோக்கி செதுக்கி அடிக்கிறார், அது நான்கு ஓட்டங்களை பெறுமா?.. fielder பந்தை P.T. உஷா போல் விரட்டி செல்கிறார் , ஆனால் மின்னல் வேகத்தில் பந்து எல்லைக்கோட்டை கடக்கிறது.
* இந்த போட்டி நடக்க பேருதவியாக இருந்து , ஜுசில் அதிகம் தண்ணீர் கலக்காமல், விளையாட்டு வீரர்களுக்கு நீர், மோர் சப்ளை செய்த ஆசாத் ஜூஸ் கார்னருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
எல்லாரும் commentary கேட்டு ரசிச்சுருபிங்கனு நம்புறேன். மீண்டும் அடுத்த வாரம் இதே நாள், இதே நேரம் உங்களை சந்திக்கும் வரை உங்களிடன் இருந்து விடைப்பெற்று கொள்வது.. உங்கள் விவேக்!! 🙂