“மண்ணின் மைந்தன்” கவர்ச்சிகரமான, எவரையும் வசீகரிக்கும் சொல்! இது தான் அரசியல்வாதிகள் ஓட்டுக்கு பயன்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டு. இந்த மண்ணின் மைந்தன் போர்வை நாடு, இனம் , மதம் , மொழி கடந்தது. ஆண்டிபட்டி முதல் அட்லாண்டா வரை இதை பார்க்கலாம்.
சமீபத்தில் படித்த/ பார்த்த சில மண்ணின் மைந்த போர்வைகள்.
* தமிழகத்தில் கணிப்பொறி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கவேண்டுமானால் , வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 70% சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ( இதற்கு எந்த கட்சியில் இருந்தும் எதிர்ப்பு இல்லை என்பது கொசுறு செய்தி )
* தன்னை மண்ணின் மைந்தனாக தமிழக அரசியல்வாதிகள் காட்டிக்கொண்டால், சிறிது மசாலாவை அதிகப்படித்தி, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் காட்டிக்கொள்வார்கள் கர்நாடக அரசியல்வாதிகள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், கணிப்பொறி நிறுவனங்கள் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம் , சொல்லி இருப்பவர் முன்னால் பிரதமர் தேவகௌடா; கர்நாடக கணிப்பொறி நிறுவனங்களின் முதல் எதிரி. இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இன்போசிஸ் நாராயணமுர்த்தி தான் வகித்து வந்த விமானதள மேம்பாட்டு தலைமை பதவியை ராஜினாமா செய்தவர். விப்ரோவின், அசிம் பிரேம்ஜி இதற்கு மேல் கர்நாடகத்தில் விரிவுபடுத்த முடியாது என்று வெளிப்படையாகவே கூறி மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தார். ( இதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் மண்ணின் மைந்தர்களுக்கு இலவச மின்சாரம், கலர் டிவி, பாமாயில், அரிசி, வீட்டுமனை,வேட்டி, சேலை,அண்ட்ராயர், கோவணம் என்று ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன)
* மாராட்டிய மாநில சிவசேனாவின் புதிய சிந்தனை திறன் வாய்ந்தவர்கள், தங்கள் மண்ணுக்கே உரித்தான “வடா பாவ்” சிற்றுண்டி நிலையங்களை மாநிலம் தோறும் ஆரம்பிக்க போகிறார்களாம். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், அன்னிய நாட்டு சிற்றுண்டிகள், பிஸ்ஸா, பர்கர் போன்றவற்றால் தங்கள் மாநில அடையாளம் அழிந்து விடுமாம். இதன் மூலம் தங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகுமாம். ( பெருகினால் சந்தோசம் )
இப்படி ஒவ்வொரு மாநில அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு தாங்கள் மண்வாசனை மாறாதவர்கள் என்று நிருபிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். கணிப்பொறி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்றால் தலை சுற்றுகிறது!! [என்ன நம்ம மச்சான் கம்பெனியா? இங்க இல்லேன்னா இன்னொரு மாநிலத்துக்கு போக போகிறான். அப்படியே இல்லையா, சீனாக்காரன் சிவப்புக் கம்பளம் விரிச்சு காத்துக் கொண்டிருக்கிறான்]
இந்தியாவில் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்கா தேர்தலிலும் ஹிலாரி அம்மையார், நம்ம அம்மா மாதிரி நெறைய செண்டிமெண்ட் டச்சுப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அட்லாண்டாவில் ஒரு சர்ச் உண்டு, அது கருப்பினர்களுக்காக பாடுப்பட்ட ” மார்ட்டின் லூதர் கிங்” அவர்கள் ஞான ஸ்நானம் செய்த சர்ச். தினமும் இதை கடந்து தான் அலுவலகம் செல்வேன். ஒரு காக்கா, குருவி கூட சாதாரண நாட்களில் பார்க்க முடியாது. ஆனால் இந்த வருடம் அவர் பிறந்த நாள் அன்று பெருங்கூட்டம். நம்ம ஊரு மாதிரி ரோட்ட மறச்சுட்டாங்க, என்னனு பார்த்த ஐயா பில் கிளிண்டன், ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்த மெக்கைன் அனைவரும் வந்திருந்தார்களாம். ( அது தெரியாம அந்த தெரு பக்கம் போயி, போலீஸ்காரரு , இன்சூரன்ஸ் இருக்கா, லைசென்ஸ் எடு அப்டின்னு அவரால முடிஞ்சளவு அதிகாரத்த காட்டிட்டாரு). அட்லாண்டாவில் கறுப்பர்கள் ஓட்டு அதிகம், தாங்கள் கறுப்பர்களின் தோழர்கள் என்று காட்டிக்கொள்ள தான் இந்த போராட்டம் .
பொருளாதாரத்தில் உலகமயமாக்கலை நோக்கி நாடுகள் முன்னேறி கொண்டிருக்கும் இந்த வேளையில் இது போன்ற கோவிந்தா கோஷங்கள் தேவையா? தன்னை மண்ணின் மைந்தனாக சித்தரித்து கொள்வதில் காட்டும் உத்வேகத்தையும், உத்தியையும் வேறு சில உருப்படியான, மக்களுக்கு பயன்பெறும் விதத்தில் மேற்கொண்டால் நாடாவது வளம்பெறும்.