Archive for மார்ச், 2008

படித்ததில், பாதித்த மரணங்கள்!

சமீபத்தில் பத்திரிக்கை, செய்தித்தாள் வலைதளங்களை புரட்டினால் தற்கொலைகளும், மரணங்களும் தான் தலைப்பு  செய்தியாயிருந்தன. மனதை மிகவும் பாதித்தது இரண்டு மரணமும், இரண்டு முரண்பட்ட தற்கொலைகளும்.

மரணமடைந்த இருவரும் என்னை  மிகவும் கவர்ந்தவர்கள். ஒருவர் சுஜாதா, எழுபது வயதிலும் ஒரு நகரத்து இளைஞனை போன்ற சிந்தனைக்கு சொந்தக்காராய் இருந்தவர். அனைத்து துறையிலும் கால் பதித்து முத்திரை பதித்தவர். சிறு வயதில் ‘என் இனிய இயந்திரா’வில் தொடங்கியது இவர்பால் ஒரு ஈர்ப்பு. பின்பு மணிரத்னம், சங்கர் படங்களின் வசனங்கள், விகடனில் ‘ஏன், எதற்கு, எப்படி’ , துப்பறியும் நாவல்கள் .  இவரது இழப்பு எழுத்து, சினிமா, அறிவியல் அத்தனைக்கும் பேரிழப்பு!  

மற்றொருவர் மிக அற்புதமான நடிகர், சிறந்த மனிதர் ( போதைக்கு அடிமையானதை தவிர), அவர் ரகுவரன். ரஜினியின் படத்தில் மற்றவரும் முத்திரை பதிக்க முடியும் என்று நிருபித்தவர். எனது வடக்கத்திய நண்பர்கள் இருவர் ‘ரகுவரன் இறந்துவிட்டாரா?’ என்று ஆச்சரியத்துடன் அனுதாபப்பட்டனர். அந்த அளவிற்கு மொழியை கடந்து புகழ் பெற்ற மிகச் சிறந்த நடிகர். இவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்தனைகள்!

படித்தவுடன் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தியது எழுத்தாளர் ஸ்டெல்லா புருஸின் தற்கொலை! தனது காதல் மனைவி ஹேமாவை பிரிந்த வேதனையும், மீளாத்துயரமும் அவரை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறது. இவரைப் பற்றி இதுவரை ஒன்றும் அறிந்திருக்கவில்லை, ஆனாலும் அறுபத்தி ஏழு வயதில் ஒருவர் தன் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்று படித்தவுடன் அவர்களது காதலின் ஆழம் தான் எனக்கு தென்பட்டது.  தற்கொலை செய்து கொள்பவன் ஒரு கோழை, வாழ்க்கையில் துயரங்களையும், சோதனைகளையும் எதிர்க திரணியற்றவன் என்பதில் எனக்கு முழு உடன்பாடு, ஆனாலும் இவரது மரணம் ஏனோ இவரை கோழை என்று சொல்ல தோன்றவில்லை, மாறாக இவரது காதலின் புனிதத்தையும், ஆழத்தையும் தான் உணரமுடிகிறது. குழந்தையே இல்லாத இருவர், ஒருவர் மற்றொருவருக்கு குழந்தையாக இவ்வளவு நாள் வாழ்ந்துவிட்டு, ஒருவர் மட்டும் மறைந்தால் இன்னொரு குழந்தையால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அதிலும் இப்படி பட்ட நேரத்தில் தனிமை மரணத்தை விட கொடுமையானது. தனது மனைவியை பிரிந்து இவர் இத்தனை நாள் வாழ்ந்திருக்க மாட்டார் மாறாக நாட்களை கடத்தியிருந்திருப்பார். இவர்களது காதல் இன்றைய நாகரீக ‘ நாய் காதல்’ செய்பவர்களுக்கு சிறந்த பாடம்.

அடுத்ததாக படித்தவுடன் பரிதாபப்பட வைத்தது  மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட நன்கு படித்த, நல்ல பதவியிலுள்ள ஒரு கணிப்பொறியாளனின் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தாலான (தற்)கொலை. இது சந்தேகமா அல்லது உண்மையா என்பது அவர்கள் இருவருக்கும், அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பு. கணவன் பெயர் அமித் புத்திராஜ், பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தவர்.  மனைவி ரிங்கு, இவர் ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தவர். இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது, அதற்குள் அத்தனையும் முடிந்துவிட்டது. வாழ்க்கையை ஆனந்தமாய் களிக்க வேண்டிய இளம் வயதில் சந்தேகம் மற்றும் ஒரு நொடி அவசரத்தில் உயிரை விட்டுவிட்டனர். இந்த மரணம் இன்றைய இளைஞர்களை அதிலும் முக்கியமாக சாப்ட்வேரில் வேலை பார்ப்பவர்களை பற்றி சிந்திக்க வைத்தது. ( திகிலாகவும் இருந்தது, நான் வேலை பார்க்கும் துறை அல்லவா? , கல்யாணம் வேற ஆகல 🙂 , சாப்ட்வேர் கலாச்சாரத்தை பற்றி எழுதிக் கொண்டே போகலாம்! இந்த மரணங்கள் இக்கலாச்சாரத்திற்கு ஒரு sample ). மனைவியை கொலை செய்துவிட்டு அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவசரப்பட்டு கொலை செய்து விட்டோமோ என்று வருந்தி தற்கொலை செய்திருக்கலாமல்லவா? அல்லது பயத்தினாலும் தற்கொலை செய்திருக்கலாம்.  தனக்கு மனைவியின் போக்கு பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து வாங்கி இருக்கலாம், அதை விட்டுவிட்டு இப்படி மூர்க்கத்தனமாக கொலை செய்துவிட்டு, கோழைத்தனமாக தானும் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ?

முன்னால் சொல்லப்பட்ட காதல் ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்த உயர்ந்த காதல். பின்னால் சொல்லப்பட்டது, அவசரக் காதல், இன்றைய நகரத்துக் காதல்.

எடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல அடுத்தவருக்கு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை என்பதை புரிந்து நடந்துக் கொண்டால், இது போன்ற மரணங்கள் தவிர்க்கப்படலாம்.

Comments (18)

Older Posts »