தீவிரவாதம் , பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு என்று சோதனையும் வேதனையும் நிறைந்த 2008 நிறைவடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. 2009’ல் பெரும் மாற்றத்தை எதிர் நோக்கி உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. மூன்றே வாரத்தில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன,அவற்றுள் சில:
வருடத்தின் முதல் வாரமே இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு ஒரு தலை குனிவாக அமைந்தது. தங்கள் நிலுவை கணக்கில் காட்டப்பட்ட 7000 கோடி ரூபாய் பொய்யானது என்றும் , இதற்கு தார்மீக பொறுபேற்று பதவி விலகுவதாக அறிவித்தார் சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு. இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனம்; 53,000 ஊழியர்கள் கொண்ட நிறுவனம்; உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம் , இமாலய மோசடி செய்திருப்பது கண்டிப்பாக இந்தியாவிற்கு உலகளவில் ஒரு பெரிய தலைகுனிவே! எவ்வளவோ தில்லு முள்ளு செய்தாலும் அதை மூடி மறைக்க பார்க்கும் நம்மவர்கள் மத்தியில் , தான் மட்டும் தான் இதற்கு பொறுப்பு என்று பதவி விலகியது இன்றைக்கும் ஒரு புரியாத புதிர் ! பல கோடி ரூபாய் மோசடியை கண்டிப்பாக ஒருத்தரால் செய்திருக்க முடியாது, அதுவும் ‘price water coopers’ போன்ற நிறுவனங்களின் ஆய்விற்கு பிறகும்!! தின்று பெருத்த பெருச்சாளிகள் இருட்டில் ஒழிந்திருக்கின்றனவோ?
அடுத்த மாற்றம், இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் விருது வாங்கிய அதே மேடையில், தனக்கே உரித்தான அடக்கத்துடன் ரஹ்மான் ‘ Golden Globe’ விருது வாங்கியதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் துக்கடா வேடங்களில் நடித்தவர்களும், நண்டு சுண்டுகளும் எதோ தாங்களே விருது வாங்கியது போல் ஆட்டம் போட்டு கொண்டிருந்த போது, தமிழனுக்கே உரிய சபை அடக்கத்துடன் , இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களுக்கும் நன்றி கூறியது மிக மிக சிறப்பு. ஒட்டு மொத்த இந்தியாவையும் இசையால் அசத்திய கலைஞனுக்கு உலக அங்கிகாரம் கிடைத்திருப்பது ஒரு சிறப்பான விஷயம். அடுத்த மாதம் அறிவிக்கப்படும் ஆஸ்கார் விருதில் மூன்று விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இவர் , நிச்சயம் ஒரு விருதையாவது பெற்று இந்தியாவிற்கும் , தமிழனுக்கும் பெருமை சேர்ப்பார் !
அடுத்த மாற்றம், அமெரிக்காவின் 160 ஆண்டு கால வரலாற்றில் , முதல் முறையாக கருப்பினத்தை சார்ந்த ஒபாமா அதிபராக பதவி ஏற்றிருப்பது. மழலையிலே தந்தையை பிரிந்து , ஒரு மிக சாதாரணமான நிலையிலிருந்து அதிபராகி இருப்பது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.பொருளாதார தத்தளிப்பு , அதிகளவில் வேலையிழப்பு , வறுமை ,ஈராக் போரினால் உலகளவில் அவப்பெயர் என்ற நிலையில் அதிபராக பொறுப்பேற்று இருக்கிறார். தனது தேர்தல் சொல்லான ‘மாற்றத்தை கொண்டு வருவோம் ‘ என்பது போல் அதிபராகி ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார் , அடுத்து பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவாரா? என்று உலகம் ஏங்கி கொண்டிருக்கிறது. ஏற்படுத்தி, 2009’ஐ வெற்றி ஆண்டாக மாற்றுவார் என்று நம்புவோம் !