Archive for நவம்பர், 2008

பொருளாதார பல்டி!

அனைவருக்கும் வணக்கம்!! நீண்ட நாட்களுக்குப்பின் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

உலகமே பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கிறது ! 134 வருட பாரம்பரியமிக்க லீமன் சகோதரர்களே(அதாங்க Lehmaan brothers) கவிழ்ந்த பிறகு நாமெல்லாம் எம்மாத்திரம்? நானும் இந்த சுனாமில சிக்கி இப்பத்தான் ஒரு துடுப்பு கெடச்சு கரை ஒதுங்கிருக்கேன். அப்படியே எழுதுவோம்னு வந்துட்டேன்!

1930′ ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதிலிருந்து மீண்டு வர வருடங்களாகும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதன் அடிப்படை காரணம் என்னவென்று பார்த்தால் பேராசை தான். குறுகிய நாட்களில் பணக்காரன் ஆகவேண்டும் என்று அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு செயல்பட்ட அமெரிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்களினால் தான் இந்த ஒரு நிலைமை. அதற்கும் மேலாக இதை கட்டுபடுத்தாத அமெரிக்கா அரசு.

இந்த பேராசை பிடித்த முதலாளிகளை காப்பாற்ற, அமெரிக்க அரசு, மக்களின் வரிப்பணத்திலிருந்து 700 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது( 1 பில்லியன் டாலர் = 5000 கோடி ரூபாய் ). அண்மையில் , திவாலான நிறுவனங்களின் மேலதிகாரிகளுக்கு அமெரிக்க பாராளுமன்ற குழுவினரின் விசாரணை நடைபெற்றது. ‘ உங்கள் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்ட போதும் தாங்கள் வளமாக இருந்தீர்கள், இப்போது திவாலான பிறகும் நன்றாக தான் இருக்கிறீர்கள் , தங்களிடம் பணம் போட்ட நடுத்தர மற்றும் ஏழை தான் இப்போது கஷ்டத்தை அனுபவிக்கிறான்!!’ என்று காரசாரமான கேள்விகளை வீசினார்கள். அமெரிக்க அரசின் செயல்பாடும் இப்படி தான் இருக்கிறது. பணக்காரனை காப்பற்ற ஏழையின் பணத்தை பயன்படுத்துகிறது.பொருளாதாரம் நன்றாக இருக்கும்போதும் அவன் ஏழை தான் , நெருக்கடி வந்துவிட்டால் ஏழையின் பாடு திண்டாட்டம் தான்.

அமெரிக்காவில் வணிகம் முழுவதும் வங்கிகளை நம்பியே இருக்கிறது. வங்கிகள், கடன் வழங்குவதற்கு ‘credit history’ என்ற முறையை கையாளுகிறது. சுருக்கமாக இதை பற்றி சொல்வதானால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ‘social security number’ என்ற அடையாள எண் இருக்கும். அவர் வாங்கும் ஊதியம், கடன் அனைத்தும் இந்த எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். ( இது அமெரிக்காவில் வேலை பார்க்கும் பிற நாட்டினருக்கும் பொருந்தும்). ஒருவர் கடன் வாங்குவதற்கு முன் வங்கிகள் credit history check மூலம் இதற்கு முன் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், தவணையை சரியாக கட்டியிருக்கிறாரா என்று கணக்கிட்டு அதைப் பொறுத்து தான் கடன் வழங்கும். இந்த முறையினால் ஏழை எளியவர்களால் கடன் வாங்க இயலாது. இவர்களை தான் முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தப் பார்த்தன. வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி இவர்களுக்கு அதிக வட்டியில் கொடுக்க ஆரம்பித்தன (subprime). இதனை வங்கிகள் முறைப்படுத்தாமல் முதலீட்டு நிறுவனங்களுக்கு கடன்களை வாரியிரைத்தன. கடன் வாங்கியவர்கள் செலுத்த முடியாமல் போகவே, முதலீட்டு நிறுவனங்கள் முதலில் திவாலாகின. இந்நிறுவனங்கள் வங்கிகளுக்கு கடன் செலுத்தாததால் வங்கிகள் இப்போது திவாலாகின்றன.

இந்த பொருளாதார சூழலினால் பொருட்களின் விலை மும்மடங்கு உயர்ந்துவிட்டது, வேலை இழந்தோரின் எண்ணிக்கை ஐந்து வருட உயர்வை அடைந்திருக்கிறது, பங்குச்சந்தை அதலபாதாளத்திற்கு சென்று விட்டது, எங்கும் நிலையற்ற தன்மை நிலவுகிறது. மக்கள் யாரை நம்பி முதலீடு செய்வது என்ற பெருங்குழப்பத்தில் இருக்கிறார்கள். வங்கியில் போட்டால் மறுநாள் வங்கியை மூடி விடுகிறார்கள், வங்கியில் போட்ட பணம் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டது என்று நிம்மதியும் இல்லை, காப்பிட்டு நிறுவனமும் திவால்! பங்கு வர்த்தக சந்தை வறுமைகோட்டுக்கு மிக மிக கீழே உள்ளது.

இந்த பொருளாதார சரிவால் இந்தியாவிற்கு பாதிப்பா? கண்டிப்பாக பாதிப்பு தான், தாராளமயமாக்கல் கொள்கைகையை கடைப்பிடிக்கும் எந்த ஒரு நாட்டிற்கும், அடுத்த நாட்டின் வீழ்ச்சியால் ஓரளவிற்கேனும் பாதிப்பு இருக்கும். இந்தியாவிற்கு அமெரிக்கா அளவிற்கு மிகப்பெரும் பாதிப்பு  இருக்காது.  நமது நாட்டின் வர்த்தகம் பெரும் அளவில் வங்கிகளை சார்ந்து இல்லை.( எங்க ஊரு சம்சாரிங்க எல்லாம் இன்னும் பைக்குல கட்டு வச்சு மாத்தி தான் வர்த்தகம் பண்றாங்க).

பங்குசந்தைக்கு தான் மிக பெரும் பாதிப்பு. நமது பங்குச்சந்தை இந்தளவிற்கு   உயர்ந்ததற்கு முக்கிய காரணம் அந்நிய முதலீடு (Foreign Institutional Investors). இப்போது அவர்களது பொருளாதார நெருக்கடியினால், போட்ட காசை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், நமது பங்குசந்தையும் அனைத்து பங்குசந்தையை போல் அதல பாதாளத்திற்கு சென்று ஒரு சிலரை தற்கொலை செய்யவும்  வைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்போர் வெறும் 2% மட்டுமே. ஏற்றுமதியை பெருமளவில் நம்பியிருக்கும் IT, BPO,
textiles போன்ற நிறுவனங்களுக்கு சற்று பாதிப்பே. இந்நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கிவிட்டதால் வேலை இழப்போரின் எண்ணிக்கை சற்று பெருகி வருகிறது. நகரங்களில் எகிறிவிட்ட வீடு, நிலங்களின் விலைகள் சற்று குறையலாம். அண்மையில், சீனாவில் பேசிய நமது பிரதமர் இந்த ஆண்டு நமது வளர்ச்சி  7 %முதல் 7.5 % இருக்கும் என்று கூறி இருப்பது சற்று ஆறுதலான செய்தி. அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்கா தேர்தலிற்கு பிறகு பொருளாதாரம் சற்று மேம்படும் என்று சிறிது நம்புவோம்!

Comments (3)

« Newer Posts