Archive for ஏப்ரல், 2008

Rehoboth என்னும் கருணை இல்லம்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையோ மறக்கமுடியாத தருணங்கள் இருக்கும். சில சந்தோசமான, நினைத்தாலே மனதுக்கு சுகம் தரும் தருணங்கள் . ஒரு சில மோசமான, நினைத்தே பார்க்கக் கூடாது என்று மறக்க நினைக்கும் தருணங்கள்.  அன்றாடம், எண்ணற்ற மனிதர்களை  சந்திக்கிறோம், பழகுகிறோம். அப்படி பழகுபவரில் ஒரு சிலர் நண்பர்களாக ஆகிறார்கள். அந்த நட்பு   சில மாதங்களுக்கோ, வருடங்களுக்கோ தொடரும், பின்பு கால ஓட்டம் மாற மாற அப்படி ஒரு நண்பர் இருந்ததே நினைவில் இல்லாமல் போகும், ஒரு சிலரின் பெயரே மறந்துபோகும்.  நல்ல நண்பர்களுடன் இருந்த மகிழ்ச்சியான நாட்கள் எப்போதும் நினைவிலிருந்து அகலாமல், அழியாமல் இருக்கும். என்னுடைய வாழ்க்கையிலும் வெவ்வேறு  காலகட்டத்தில் வெவ்வேறு நல்ல நண்பர்கள், அவர்களுடன் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியான நிறைய தருணங்கள்.  ஆனால், இன்றைக்கும் நினைத்தால் மனநிறைவு தருவது எந்த ஒரு சுயநலமும் இல்லாமல், முதன்முறையாக  நண்பர்களுடன் இணைந்து ஒரு பொது நல காரியத்தில் ஈடுபட்டது.  அது தான் எங்கள்  ‘Rehoboth’  பயணம்,  இது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களின் காப்பகம்.

இதில் பங்கேற்றவர்கள் எல்லாம் பெரிய மகாத்மாவோ, தெரசாவின் வழி தோன்றியவர்கள் என்றோ நினைத்து விடவேண்டாம். எல்லோரும் வேலை செய்வதாக கூறிக்கொண்டு நகட்டிக்கொண்டு இருக்கும்  கணிப்பொறி வல்லுனர்கள்.  இரண்டு வேளை கேன்டீன்னிலும்,  மூன்று வேளை தம்மடிக்க வெளியேவும் , ( இதுல நான் வேடிக்கை பாக்க மட்டும் தான்-என்னைய யாரும் தப்பா நெனச்சுடாதிங்க 🙂 ) , மதிய சாப்பாட்டுக்கு தாராளமாக ஒரு மணி நேரமும் எடுத்துக் கொள்பவர்கள்.  இதுபோக மீதி நேரத்தில் அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தோன்றினால் செய்வார்கள்.  இப்படியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் , ‘ வேல தான் ஒழுங்கா செய்ய மாட்றோம் , ஏதோ நம்மால முடிஞ்ச நல்லத செய்வோம் ‘ என்று எதோ ஒரு நல்ல உள்ளத்திற்கு ஞானோதயம் பிறக்க , என்ன செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினோம். அப்போது தான் ‘ Rehoboth’  என்று மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களின் காப்பகம், சென்னையில் போரூரில் இருப்பதாகவும், அது நிதிபற்றா குறையில் இயங்குவதாகவும் நண்பன் பால் ஸ்டீபன்  கூறினான், அது தான் இந்த பயணத்தின் விதை.  அதை வளர்த்தவர்கள் சுர்ஜித்( கர்ஜனையான பெயர், ஆளும் அப்படி தான். இவர தெரியாத ஆளுங்க ஆபீஸ்ல ரொம்ப கம்மி அதுனால நெறைய தொகை வசூல் பண்ணிக் கொடுத்தார்), வெங்கடேஷ் (இவர செல்லமா V1 அப்டின்னு கூப்பிடுவோம், சுர்ஜித் ஸ்டேட்’னா, இவரு நேஷனல், இவர் தான் இந்த பயணத்திட்டம் நெறைய பேருக்கு சென்றடைய பேருதவி புரிந்தவர்) , சிவா ( சிவாஜி, இவர ஆபீஸ்ல மட்டும் இல்ல, செக்யூரிட்டி, பக்கத்துல கடை வச்சுருகவுங்க எல்லாருக்கும் தெரியும், இவருடைய பங்களிப்பும் மிகையானது), துர்காதாஸ் ( தாஸ் பாஸ் , எல்லாருக்கும் பெரியண்ணன் , இந்த பயணத்துக்கு டிரைவர் வேலை முதற்கொண்டு பார்த்தவர்) , வெங்கி ( உசந்தவரு, உருவத்துல மட்டும் இல்ல உள்ளத்துலயும்) , மற்றும் எங்களுடன் ‘Patni Computer Systems’ல்  வேலை பார்த்த அனேக நல்ல உள்ளங்கள் மற்றும் எங்களது பிற நண்பர்கள். 

அனைவரின் பேருதவியால் ஒரு கணிசமான தொகையை வசூலித்தோம். வார இறுதி நாள் ஒன்றில், ஏதோ சுற்றுலாவுக்கு செல்வதை போல் நான்கு பைக் , ஒரு கார் என்று  போரூர் நோக்கி பயணம் தொடங்கியது. போரூரில் இந்த இல்லத்தை கண்டுபிடிக்கவே அரை மணி நேரம் ஆகியது. சென்னை மாநகருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதது போல் ஒரு சிறிய மணல் ரோட்டில்,  எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக வீற்றிருந்தது அந்த கருணை இல்லம். எங்களை வாசலில் வந்து வரவேற்றார் ஒரு நடுத்தர வயதானவர். ஒரு கிராமத்து பள்ளி போல் இருந்தது அவ்விடம்.  அந்த காப்பகத்துடன் ஒரு முதியோர் இல்லமும் இருந்தது. ஒரு பெரிய asbestos கூரை வேய்ந்த பெரிய அறைக்குள் எங்களை அழைத்துச் சென்றார் , அதனுள் வரிசையாக ஆங்காங்கே கட்டில்கள். கூனி குறுகிய தேகமும்,  நரையோடிய தலையுடன் நிறைய தாத்தா, பாட்டிகள். ஒரு சில கவலை தோய்ந்த முகங்கள். அவர்களுக்கு எங்களை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி , ஒரு சிலர் சந்தோஷத்தில் கையசைத்தார்கள். அந்த அறையை கடந்து வெளியில் கூட்டிச் சென்றார். வெளியேவும் நிறைய கட்டில்கள்,  இடப் பற்றாக்குறையால் வெளியேவும் ஒரு சிலரை தங்க வைக்க வேண்டிய சூழல் என்று கூறினார்.  பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தது.

அந்த முதியோர் இல்லத்தை கடந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களின் காப்பகத்திற்கு கூட்டிச் சென்றார். அந்த காப்பகத்தை நடத்தி வரும் பெண்மணியை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு 35 வயதுக்கும் குறைவாக தான் இருக்கும், அவரது பெற்றோர் மருத்துவர்கள், கணவர் வழக்கறிஞர். இவர் மனோதத்துவதில் பட்டம் பெற்று, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களை பற்றிய ஆராய்ச்சி படிப்பு படித்து அதன் பாதிப்பில் இந்த காப்பகத்தை ஆரம்பித்ததாக கூறினார்.  மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள்,  வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, பிச்சை எடுக்கும் நிலையிலும் , ஒரு சில சதை வெறி பிடித்த மனித மிருகங்களின் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள் என்றும் கூறினார். அவர்களை தாங்கள் தெருவிலோ , பொது இடத்திலோ கண்டுபிடித்து இங்கு அழைத்து வருவதாகவும் , ஒரு சிலர் வந்து சேர்த்து விட்டு போவதாகவும் கூறினார். அவர்களுக்கு அடிப்படை விசயங்களை கற்றுக் கொடுத்து, சுகாதாரம் கற்றுக் கொடுத்து குழந்தையை போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,  அதிலுள்ள சிக்கல்களையும் கூறினார். ஒரு சிலர் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்றே தெரியாது, அதனால் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும், அதனால் இவர்களை பாதுகாக்க 4-5 பேரை வேலைக்கு அமர்த்தி இருப்பதாகவும் கூறினார்.


நாங்கள் வருவதை அவர்கள் முன்னரே அறிவித்து ஒரு பெரிய அறையில் அனைவரையும் உட்கார வைத்திருந்தார்கள். நாங்கள் அந்த அறைக்குள் சென்றவுடன் அனைவரும் கை தட்டி, அவர்களே செய்த பூங்கொத்தை கொடுத்து  எங்களை வரவேற்றார்கள். ஒரு நாற்பது பேர் இருந்திருப்பார்கள்; பெரும்பாலும் சிறுமிகள், சில நடுத்தர வயதுடையோர், சில வயதான பெண்மணிகள். ஒரு குழிக்குள் புதைந்த கண்களுடனும், அவை எந்த திசையை பார்க்கின்றன என்று சொல்ல முடியாத அளவுக்கும்,  வாடிய முகமும் கொண்ட ஒரு குழந்தையை போன்ற ஒன்றும் அறியாத அவர்களை பார்த்த பொழுது  மனதில் ஏதோ ஒரு பாரம் இருப்பது போலவும், கண்ணீர் முட்டிக் கொண்டு வருவது போலும் இருந்தது.  ஒரு வயதான பெண்மணி எங்கள் அனைவரின் கைகளையும் வருடினார், மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.  நாங்கள் சேகரித்த தொகையை காசோலை எடுத்து கொண்டு சென்றிருந்தோம். அதை அங்குள்ள ஒரு சிறுமியிடம் கொடுத்தோம், அவள் அதை அந்த காப்பக பெண்மணியிடம் கொடுத்தார். அதை வாங்கி பார்த்த அந்த பெண்மணியின் முகத்தில் ஆச்சரியம் கலந்த சந்தோசம். மிகுந்த ஆச்சரியத்துடன், தான் இவ்வளவு தொகையை எதிர்பார்க்கவில்லை, இது எங்களது ஒரு மாதத் தேவைக்கான தொகை என்று கூறினார். பிறகு அவர்களுடன் சிறுது நேரம் இருந்துவிட்டு ,  படமும் எடுத்துக் கொண்டோம்.  போட்டோ பிடித்தவுடன் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.  அந்த பெண்மணி அனைவரும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து  பார்த்தது இல்லை என்று கூறினார். அவர்களிடம் இருந்து விடைப்பெற்று கொண்டு திரும்பும் வழியில் அனைவரிடமும் ஒரு இனம் புரியாத மௌனம் நிலவியது, போகும் போது சுற்றுலா சென்றது  போல் இருந்த கலகலப்பு இப்போது இல்லை,  ஒருவருக்கு ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மனதிற்குள் ஏதோ பாரம் போலவும் அதே சமயம் ஒரு ஆத்ம திருப்தியையும் உணர முடிந்தது. இதை இத்துடன் முடித்துக்கொள்ளக் கூடாது தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டோம்.


அதற்கு அடுத்த வருடம், இதை விட அதிக தொகையை ஒரு ஆட்டோ வாங்குவதற்கு அந்த காப்பகத்திற்கு , பால் ஸ்டீபன் மற்றும் சில நண்பர்கள் வசூல் செய்து வழங்கினார்கள்.  

ஒரு ஏழை மாணவனின் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று அடிக்கடி நினைப்பது உண்டு, ஏனென்றால் அது அவனை மட்டுமல்ல அவனது குடும்பம், அவனைச் சார்ந்து இருப்பவர்களையும் உயர்த்தும் என்பது என் எண்ணம். அதற்கான வாய்ப்பு சென்ற வருடம் நண்பர் சிவா மூலம் அமைந்தது. ஈரோடு அருகில் ஒரு கிராமத்தில், 1123 மதிப்பெண் பெற்று PSG பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து, பொருளாதார நெருக்கடி காரணமாக சேரமுடியாமல் தவித்த மாணவனுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்தோம். இன்று அவன் PSG Tech’ல் முதல் வருடம் Production Engineering படித்துக் கொண்டிருக்கிறான். 

நம்ம ஊருல ஒரு பழமொழி உண்டு ” இருக்கிறவன் இல்லாதவனுக்கு குடுக்குறது தான் மரபு ” . இந்த கட்டுரையின் நோக்கமும் அது தான்.  நாங்கள் செய்த உதவிகளை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற கேவலமான எண்ணத்துடன் இதை எழுதவில்லை.( அப்படி நீங்க ஒரு வேளை நெனசிங்கனா இத படிச்சத மறந்துடுங்க) . அண்மையில் பணி நிமித்தம் மற்றும் இடமாற்றம் காரணமாக இந்த அணியின் செயல்பாட்டில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது , இதை அவர்கள் நிச்சயம் படிப்பார்கள் அடுத்த பயணத்தை விரைவில் தொடருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
 

Comments (9)

« Newer Posts · Older Posts »