பள்ளிக் குறும்புகள்
( இந்த கட்டுரை முழுக்க முழுக்க எனது பள்ளி பருவத்தில் நடந்த குறும்புகளும், நகைச்சுவைகளும் . அதனால் எனக்குப் பழக்கப்பட்ட, நகைச்சுவைக்கு வலிமை சேர்க்கும் மதுரை வட்டார மொழியில் எழுதியிருக்கிறேன், ஆங்காங்கே ஆங்கிலமும் தென்படும். எனது தாய்மொழியை கொலை செய்யும் நோக்கில் எழுதவில்லை)
எல்லாருக்கும் அவுங்க வாழ்க்கைல ரொம்ப சந்தோஷமா இருந்தது எப்ப அப்புடினு கேட்டா, அவுங்க பள்ளி பருவத்த தான் சொல்லுவாங்க. எனக்கும் அப்படி தான், இன்னைக்கும் பள்ளிக்கூடத்துல நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் மனச விட்டு நீங்காம இருக்கு. பள்ளிக்கூடத்துல குசும்போட சேர்ந்து படிப்பும் ஓரளவுக்கு வந்துச்சு. எங்க ஊர் நகரமும் இல்லாம ,கிராமமும் இல்லாம ரெண்டுக்கும் இடப்பட்ட ஒரு ஊர். ரொம்ப செழிப்பான ஊரு, ஊர சுத்தி மேற்குத் தொடர்ச்சி மலை. வயல், வாய்க்கா வரப்புனு பச்ச பசேலுனு இருக்கும்.
இப்படியிருக்க ஊருல, ஒரு ஆங்கிலப் பள்ளில என்னைய சேத்தாங்க. English Medium’ல படிச்சா பையன் பயங்கர அறிவாளியா, தஷ்புஷ்’னு இங்கிலீசு எல்லாம் பேசுவேனு நெனச்சாங்க போல! எங்களுக்கு சொல்லிக்குடுத்த மிஸ்ஸுகளே தமிழ்ல தான் பேசுவாங்க, இதுல நமக்கு எங்க இங்கிலீசு வரும். நாங்க அப்ப பேசுன இங்கிலீசு எல்லாம் ‘Good Morning/Good Afternoon /Good evening miss ‘, ‘ thank you miss’ தான். கொஞ்சம் நீட்டமான வாக்கியமா பேசியிருந்தா, ‘ May I come into the class miss’ தான். இதுபோக நமக்கு தெரிஞ்ச இங்கிலீசுனா ‘ Miss this boy is pinching miss’ ..அதுலயும் ஒரு சில பயக ரொம்ப தெளிவா ‘ Miss this boy is கிள்ளி’ ing miss/ அடிச்சி’ing miss ‘ அப்புடினு பேசுவாய்ங்க. அந்த ஸ்கூல்ல, ஒரு கிழவனாரு தான் correspondent, அவரு மகன் தான் Director, அவருக்கு ஒரு நாலு பொண்ணுங்க அவுங்க தான் ஒருத்தர் மாறி ஒருத்தரா ‘ Headmistress ‘. Headmistress’னு கூட சொல்லமாட்டோம் ” Big Miss” அப்படினு தான் சொல்லுவோம். ஒரு ஃப்யூன் அம்மா ஒன்னு இருந்துச்சு , அந்தம்மாவ ஃப்யூனுனு சொல்லக்கூடாதுனு, அவுங்க எல்லா கிளாசுக்கும் Attendance Register கொண்டு வந்து வைக்கிறனால அவுங்கள ’Register Miss’ அப்படினு கூப்பிடனும்னு சொல்லிட்டாங்க. அந்தம்மாவுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமா இருந்துச்சு. இந்தம்மா வீடு வேற எங்க வீட்டுக்கு கொஞ்சம் பக்கம். நான், அந்த காலத்துலயே பெரிய விளையாட்டு பிள்ளை, எப்பவும் தெருவுல, கோலிக்குண்டு, கிட்டிப்புள்ள(கில்லி), கிரிக்கெட்’னு எதாவது விளையாண்டுக்கிட்டு தான் இருப்போம். நம்ம உயிர் தோழர்கள் இருக்கானுங்களே, இந்தம்மாவ பார்த்த உடனே, ரொம்ப நல்லது சொல்ற மாதிரி ‘ ஏன்டா தெருவுல விளையாண்டுட்டு இருக்க, வீட்ல உக்காந்து படிக்க வேண்டிதான!’ அப்படினுபாய்ங்க. Register அம்மாவுக்கு பயக நக்கல் பண்றானுங்கனு நல்லா தெரியும், அந்த கடுப்ப காட்ட என்னப்பத்தி ஸ்கூல்ல போட்டுக்குடுத்துடுச்சு. அப்பறம் என்ன? விளாசல் தான் . சொல்ல மறந்துட்டேனே ,Punishment பேரு அத்தனையும் நமக்கு அப்பவே அத்துப்படி, ‘ Kneel Down’, ‘Standup on the bench’ , ‘Get out of the class’ . ….இதுல ‘Get out of the class’ காலேஜ் கடைசி வருசம் வரைக்கும் கேட்க வேண்டியதா போச்சு.
அஞ்சாவது முடிச்சதும் வேற ஸ்கூல்ல சேர்த்தாங்க. ஸ்கூல் பேரு, ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி, பேரு மாதிரியே ஸ்கூலும் மூவாயிரம் பேரு படிக்கிற ரொம்ப பெரிய ஸ்கூல். மதுரை மாவட்டத்துலேயே (இப்ப தேனி மாவட்டம் ) ரெண்டாவது பெரிய ஸ்கூலுனு சொல்லுவாங்க. இதுக்கப்புறம் வேற ஒரு ஸ்கூல், காலேஜுனு படிச்சிருந்தாலும், இந்த ஸ்கூல மட்டும் என் வாழ்க்கைல மறக்கவே முடியாது. இந்த ஸ்கூல்ல படிப்பு மட்டும் இல்லாம, விளையாட்டு, கலை இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்தாங்க. அதவிட நண்பர்கள், இங்க இருந்து தான் நம்ம வாழ்க்கைல நையாண்டி, நக்கல், கேலி, கிண்டல் எல்லாம் ஆரம்பிச்சது. இன்னைக்கு வடிவேலு படத்துல வர்ற காமெடி எல்லாம், அந்த ஏரியாவுல நடக்கிற சம்பவங்களோட தழுவல் தான். ‘ வாடா என் சப்பாத்தி/ பன் ரொட்டி’ இதெல்லாம் ஸ்கூல்லயே பேசுன பேச்சு. கொஞ்சம் சவுண்டு வுடுற பார்ட்டியா இருந்து, உள்ளுக்குள்ள பயப்புடுற பயலுகளுக்கு பேரு ‘ புலிகேசி’. சில பயபுள்ளைக, சும்மா போய்க்கிட்டு இருக்கவன ’ வாண்ணே ‘ அப்டினு ரொம்ப மருவாதையா கூப்புடுவானுங்க, கொஞ்சம் கூர்ந்து கவனிச்சோம்னா ‘ வா வெண்ணைய்’ அப்டினு சொல்லிருப்பானுங்க.
இங்க, எனக்கு பாடம் சொல்லிக்குடுத்த எல்லா ஆசிரிய/ஆசிரியைகளும் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. பாடத்துக்கு மட்டும் இல்லாம, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியா உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர், Craft teacher ( அவர தொழில் வாத்தியார் அப்படினு சொல்லுவோம்), NSS, NCC, Exnora இப்படி எல்லாத்துக்கும் தனித்தனியா வாத்தியார் இருந்தாங்க. ( சுமார் 150 ஆசிரியர்கள் வேலை பார்த்த, 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஸ்கூல்). இந்த ஸ்கூல ரொம்பப் பிடிச்சதுக்கு ஒரு முக்கிய காரணம் என்னன்னா, படிக்க சொல்லி ரொம்ப தொந்தரவு (!!) பண்ண மாட்டாங்க, ஒருசில வாத்தியாருங்க எல்லாம் தோள்’ல கையப் போட்டுட்டு போற அளவுக்கு ரொம்ப friendly’a இருப்பாங்க. அதுலயும் தமிழ் வாத்தியாருங்கனா எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

‘ Pythagoras theorm’, ‘ Bunsen burner ‘, ‘யுவான் சுவாங்’ இதெல்லாம் கேட்டு தூங்கி வழிஞ்சுட்டு இருக்கும் போது, ‘ பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள் தெரியுமா? ஆண்களை கவறுவதற்காக’ அப்டினு எங்க இராசையா பாடம் நடத்துவார் பாருங்க. மத்த வகுப்புல வாயே தொறக்காத நம்ம பயலுகளுக்கெல்லாம் அப்ப தான் நெறய சந்தேகம் வரும். ஒரு பெரிய பாகப்பிரிவினைப் பண்ணி இடதுபக்கம் தனியா பொண்ணுங்கள உக்கார வச்சுருப்பாங்க, நம்ம மைனருங்க ஓரக்கண்ணுல ஒரு லுக் விடுவானுங்க, அதுங்க பாவம் நெளிஞ்சிட்டு இருக்குங்க. இன்னொரு தமிழ் வாத்தியார் பேரு நடராசன், ஆனா தமிழ் மேல உள்ளப் பற்றுனால ‘ தமிழ் பித்தன்’ அப்படினு மாத்திக்கிட்டார். தூய தமிழ்’ல தான் பேசுவாரு, ‘Chalk Piece’ க்கு ‘சுண்ணக்கட்டி’ அப்படிம்பார். சிகரெட்டுக்கு ‘ காகிதச்சுருட்டு’, பீடிக்கு, ‘ இலைச்சுருட்டு’ . அவர ‘ஐயா’னு தான் கூப்பிடனும், attendance எடுத்தாருன்னா ‘உள்ளேன் ஐயா’ அப்டினு தான் சொல்லனும், ஒரு சேட்டக்காரன் ஒருநாள் ‘ ஆஜர் ஐயா’ அப்டினு சொல்லிட்டான், அவன வெளுவெளுனு வெளுத்துட்டார்.
இன்னொருத்தர் இருந்தார் , அவர் மன்னர், போர் பத்தி நடத்துனா மன்னராவே மாறிடுவார், அகநானூறு நடத்துனா காதலனா மாறிடுவார். பொன்னுங்கட்ட லிட்டர் கணக்கா வழிஞ்சு தள்ளுவார். நாங்க அத பார்த்து சிரிச்சோம்னா முதுக வீங்கவுட்றுவார். தமிழ ஒழுங்கா வாசிக்கணும்டா, இப்படித்தேன் ஒருத்தன் மண்டபத்துல ‘ சாப்பாடுப்போடப்படும்’ அப்டினு இருந்தத, ‘சாப்பா’, ‘டுப்போ’ ,’டப்பா’ ,’டும்’னு அப்டினு வாசிச்சானாம், சொல்லிட்டு சரவெடி மாதிரி சிரிப்பார். Social Science வாத்தியார் பேரு அழகர்சாமி, நாங்க அவர ‘ குண்டழகர்’ அப்டினு கூப்பிடுவோம். கிளாசுக்குள்ள என்ட்ரி குடுக்கும் போதே ‘ டேய் தீவெட்டி தடியனுங்களா!! ‘ அப்டினுட்டு தான் வருவார். மனுசன் நல்லா கதை சொல்லுவார். ‘ பூம்புகார்ல கடல் மணல அள்ளிட்டு அதுக்கு பதிலா அரிசி குடுத்தான் ரஷ்யாக்காரன், அத ஏனென்னு கண்டுபிடிக்க ஒரு வருசம் ஆச்சு! ஏனென்னா அந்த கடல் மணல்’ல யுரெனியம் இருந்துச்சு, அத வச்சு அவன் அணுகுண்டு தயாரிச்சு இருந்திருக்கான்’ அப்டினு கதைய முடிச்சிட்டு ஒரு பாடம் முடிஞ்சது அப்டின்னுவார், அவரு முடிச்ச பாடம் என்னனு புத்தகத்த தொறந்து பார்த்தா அக்பர பத்தி இருக்கும்! ஆனா Map சூப்பரா சொல்லித்தருவார். ஒரு பிரம்ப கைல வச்சுக்குவார், map’அ சுவத்துல தொங்கவிட்டுட்டு ஒவ்வொருத்தரையா வந்து குறிக்கச் சொல்லுவார். ‘ திண்டுக்கல குறி’ அப்படிம்பார், நம்மாளு சிக்கிம்’ல கைவப்பான். பின்னாடி பழுக்கவச்சுடுவார். ரெண்டு நாளைக்கு உட்கார முடியாது, குப்புற தான் படுக்கணும். செம காமெடியா இருக்கும் இவர் வகுப்பு.
அப்பறம் படம் வரையரதுல நெறைய காமெடி பண்ணிருக்கேன். படம் வரையரது எல்லாம் ‘தாரே ஜமீன் பர்’ல காட்டுற dyslexia மாதிரி தான் எனக்கு. ( இந்தப்படத்துல பல காட்சிகள் என்னோட நிஜ சம்பவம் மாதிரி இருந்துச்சு). ஆறாவது படிக்கும் போதுனு நினைக்கிறேன், ’ Map Drawing ‘ இருக்கும், அதுல கடலுக்கு நீல வண்ணம் பூசனும். ’ Arabian sea ‘ குறிக்கச் சொல்லிருந்தாங்க, நான் ஆர்வக் கோளாறுல, ஸ்கெட்ச் பேனாவ வச்சு கரகரனு இழுத்துதுல, அரபிக்கடல் மட்டும் நீலமா ஆகலை, அடுத்த பத்துப் பக்கமும் நீலமா ஆயிடுச்சு ( சஹாரா பாலைவனம் உட்பட) . என் பக்கத்துல உட்கார்ந்து இருந்தவன்ட காட்டுனேன், அவன் ” chalkpiece’a தண்ணில தொட்டு தேய் அப்டினான் ” , நானும் அப்படியே செஞ்சேன். அப்படி பண்ணுனதுல, அரபிக்கடல்ல காலணா அளவுக்கு ஓட்டை விழுந்து அந்தப் பக்கமே கிழிஞ்சிடுச்சு. எங்க டீச்சர் இப்ப ஒரு ஒருத்தனயா நோட்ட எடுத்துட்டு வர சொல்லி, கையெழுத்து போடுறாங்க. நான் தலய தொங்கப் போட்டுட்டே போய் நின்னேன். உட்கார்ந்து கையெழுத்து போட்டுட்டு இருந்த டீச்சர் , என்னோட அரபிக்கடல பார்த்த அதிர்ச்சில படார்’னு எந்திருச்சு, என்னோட நோட்ட வெளிய எரிஞ்சு, வெளிய போனு காட்டுக் கத்தல் கத்துனாங்க. நான் அப்பாடா இவ்வளவு தானா, இதல்லாம் நமக்கு புதுசா என்னனு casual’a வெளிய போயிட்டேன்.
பதினொன்னாவது ஒரு strict’ஆன ஸ்கூல்ல சேர்த்துவிட்டு Biology group வேற எடுக்க வச்சுட்டாங்க. (ஒரு நிபந்தனையோட தான் சேர்ந்தேன், யாராவது lab practical’க்கு படம் வரைஞ்சு கொடுக்கனும்னு). முதல் வகுப்புல Botany வாத்தியார் ஒரு செடி படம் வரைஞ்சு பாகம் குறிச்சு, அத எல்லாரையும் வரைய சொன்னாரு. புது ஸ்கூல்ல முதல் நாளே நம்ம comedy show ஆரம்பமா அப்படினு வரைஞ்சேன். எல்லாரையும் பார்த்துட்டு வந்தவரு, என் நோட்ட பார்த்து கொஞ்சம் டென்ஷன்னானாலும், முதல் வகுப்புன்றனால அடிக்கலை. நோட்ட மட்டும் தூக்கி , ‘ இங்க பாருங்கப்பா இது தான் செடியாம் ‘ அப்படினு எல்லாருட்டயும் காட்டி கேவலப்படுத்திட்டார்.
ஏதோ, எங்க அக்காவும், அம்மாவும் எனக்கு practical படம் எல்லாம் வரைஞ்சு குடுத்தனால கொஞ்சம் சுமூகமா ஓரளவு நல்ல மதிப்பெண்ணோட பள்ளி படிப்ப முடிச்சேன். இன்னைக்கு எத்தனையோ ஊரெல்லாம் சுத்தி, அமெரிக்கா வரைக்கும் வந்துட்டாலும், அந்தப் பள்ளி வாழ்க்கை தான் மறக்க முடியாம இருக்கு… எப்பவும் இருக்கும்!!

Vivek, Malarum ninaivukal endrum marakamudiyatha inimaiyana santharpangal, vaalkai suvai serkum palli paruvam. Nice blog. Expect more from you buddy.
Thanks Dude!
Vivek,
பள்ளி பருவாோம் அப்படியே யாபகம் வந்துருச்சு. இன்னும் நெறய விஷயம் ஆட் பண்ணி இருக்கலாம்.